Thursday, May 12, 2016

அரசியல் என்னும் பாவம்

அரசியல் என்னும் பாவம் !
இதனை படித்து விட்டு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்
மகாத்மா காந்தி ஏழு விதமான பாவங்களை பட்டியலிட்டுள்ளார். அதில் , கொள்கையில்லாத அரசியல் தான் முதல் பாவமாக எடுத்துரைக்கின்றார். இன்று தமிழகத்தில் தான் எத்தனை அரசியல் கட்சிகள். அவர்களின் கொள்கை தான் என்ன என்பது யாருக்காவது தெரியுமா? அந்த கட்சியை தொடங்கியவர்களுக்கே தெரியுமா? என்றால் அது சந்தேகம் தான். ஆனால், அனைவரும் ஆட்சியாளராக வேண்டும் , முதல்வராக வர வேண்டும். இந்த ஒரு கொள்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதிபலிக்கின்றன. முதலில் நமது நாடு என்பது என்ன ? நமது கலை , கலாச்சாரம் , பண்பாடு என்ன ? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீராமர் மன்னராக ஆட்சி செய்த சமயத்தில் , தேசத்தில் உள்ள அனைத்து மக்களும் சுபிட்சமாக தான் வாழ்ந்தார்கள். அதுவரை சாமன்ய மக்களை சந்திக்காத மன்னன் , மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனையை தீர்த்தார் மன்னர் ஸ்ரீராமர். தன்னுடைய சொந்த வாழ்க்கையையும் பாராமல் மக்களின் விருப்பத்திற்கு வாழ்ந்து , அவர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்தினார் அவர் .ஸ்ரீராமரைப் பற்றி பேசினால் உடனே அவனை மதவாதி என்பார்கள். எந்த மன்னர் எப்படி ஆட்சி செய்தார் என்பதை அறிந்து , அதில் உள்ள நல்லவைகளை எடுத்துக்கொண்டு அதை பின்பற்றி மக்களுக்கு திட்டங்களை வழங்குவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் , மன்னராட்சி காலத்திலேயே மக்களாட்சியை போல் ஆட்சி செய்தவர் ஸ்ரீராமர். அதனால் தான் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களே இந்தியாவில் ராமராஜ்ஜியம் ஏற்படவேண்டும் என்றார். ராமராஜ்ஜியம் என்றால் தூய்மையான ஆட்சி என்று அர்த்தம். ஸ்ரீராமரைப் பற்றி பேசினால் எப்படி அவன் மதவாதி ஆகிறான்?. இராமாயணமும் , மகாபாரதமும் தான் நம் நாட்டின் இதிகாசங்கள் ஆயிற்றே ? இதனை ஒன்றாம் வகுப்பிலேயே படிக்கின்றோம், அப்படி என்றால் ஒன்றாம் வகுப்பு மாணவனும் மதவாதியா ? நல்லவைகளை எடுத்துக் கொள்வதில் அன்னப்பறவையாக இருப்பதில் தவறில்லையே. பிறகு அன்னப்பறவையையும் மதவாதப்பறவை என்று கூறுவார்களோ?
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் ! வாழிய பாரத மணித்திரு நாடு ! வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !! வந்தே மாதரம் !!! இது மகாகவி பாரதியாரின் பாடல் . வாழிய செந்தமிழ் என்று மொழிப்பற்றை கூறுகிறார் வாழ்க நற்றமிழர் என்று இனப்பற்றை கூறுகிறார் வாழிய பாரத மணித்திருநாடு என்று தேசப்பற்றை கூறுகிறார் . இந்த மூவகைப்பற்றும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இல்லையென்றால் அவன் மனிதனே இல்லை என்கிறார். தாயில்லாமல் ஒரு குழந்தை பிறக்க முடியுமா ? அதுபோல தான் இந்த மூவகைப்பற்றும். அப்படி என்றால் ஒரு ஆட்சியாளனுக்கும் இம்மூவகைப்பற்றும் எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்?
போர் நடந்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று இலங்கையில் நடைபெற்ற போரை நியாயப்படுத்தும் விதமாக பேசியவர் இந்நாள் முதல்வர்.
மழை நின்றாலும் தூவானம் விடவில்லை என்பது போல் , அங்கொன்றும் இங்கொன்றுமாக தாக்குதல் நடத்தப்படுகின்றது வேறொன்றும் இல்லை என்று இறுதிகட்டப்போரின் போது 2009ல் , அறிஞர் அண்ணா நினைவிடத்தில் நடைபெற்ற நான்கு மணி நேர உண்ணாவிரத நாடகத்தின் முடிவில் முன்னாள் முதல்வர் கூறியது. இறுதிகட்டப் போரின் போது காங்கிரசுடன் கூட்டணி அரசில் இருந்து காங்கிரஸ் அரசு இலங்கைக்கு செய்த எந்த உதவியையும் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தவர்.
பித்தனும் புத்தனாகும் வகையில் தன் பேச்சால் கவர்ந்தவர்கள் அறிஞர் அண்ணாவும் , அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களும். இன்று ஒரு முதல்வர் வேட்பாளர் பேசுகிறார் , அவர் மக்களே என்கிறாரா இல்லை மக்கழே என்கிறாரா என்பது கூட தெளிவாக விளங்கவில்லை என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இலங்கையில் தமிழினத்துக்காக பாடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மேல் உள்ள பற்றினால் தான் தன்னுடைய ஒரு பிள்ளைக்கு பிரபாகரன் என்றே பெயர் வைத்ததாக கூறினார். தன்னுடைய திரைப்படத்திற்கும் கேப்டன் பிரபாகரன் என்றே பெயர் வைத்தார். இலங்கைத் தமிழர் பிரச்சனை தீரும் வரை தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்று கூறி புறக்கணித்தவர் , அந்தளவிற்கு தமிழின பற்றுடையவர். , இன்று தமிழக முதல்வராக வர வேண்டும் என்பதற்காக , தமிழின துரோகியோடு கூட்டு வைத்துள்ளார் . தமிழின துரோகி காங்கிரஸ். 2009ல் இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசு நடத்திய போரில் அவர்களுக்கு போர்க்கருவிகள் , ராணுவத் தளவாடங்கள் முதல் ரேடார் உட்பட எல்லாவற்றையும் சிங்கள அரசிற்கு கொடுத்து உதவியது இந்திய காங்கிரஸ் தலைமையிலான அரசு. இதை வைகோ அவர்களே ஆதாரத்துடன் பலமுறை தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார்.
இந்திய அரசின் உதவியில்லாமல் எங்களால் போரை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது என்று தலைமையேற்று போரை நடத்திய அப்போதைய அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார். அச்சமயத்தில் காங்கிரஸ்காரராகவே இருந்தது மட்டுமல்லாமல் , மத்திய அமைச்சராகவும் இருந்தவர் தான் ஜி.கே.வாசன் அவர்கள். திரு ஜி,கே.மூப்பனார் அவர்கள் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரசை 2003ல் காங்கிரஸ் கட்சியோடு இணைத்து விட்டு 2004ல் மத்திய அமைச்சராகி , 2014 வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதவி சுகத்தை அனுபவித்தவர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு , ஒரு நோக்கமும் இல்லாமல் , இனி காங்கிரஸ் கட்சியில் இருந்தால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற ஒரே நோக்கத்திற்காக 2015ல் மீண்டும் தொடங்கப்பட்டது தான் தமிழ் மாநில காங்கிரஸ். வாசன் அவர்கள் மத்திய அமைச்சராக இருந்த போது, காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய ஆயுதங்களை தடுத்து நிறுத்தினாரா ? தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல்களை தடுத்து நிறுத்தினாரா? எதையும் செய்யவில்லை. காங்கிரஸ் என்ற வார்த்தைக்கு முன் தமிழ் மாநில என்று இரு வார்த்தைகளை சேர்த்துக்கொண்டால் அவர் காங்கிரஸ்காரர் அல்ல என்று ஆகிவிடுமா ? தமிழ் மாநில காங்கிரசை மூப்பனார் அவர்கள் தொடங்கிய போது அகில இந்திய அளவில் உங்கள் தலைவர் யார் என்று கேட்ட அடுத்த வினாடியே “ சோனியா காந்தி “ என்று பதில் சொன்னார். தமிழகத்தில் காங்கிரஸ் என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் தான் , தொண்ணூறு சதவீத காங்கிரஸ்காரர்கள் தமிழ் மாநில காங்கிரசில் தான் உள்ளார்கள் என்கிறார் வாசன். அப்படி என்றால் என்ன அர்த்தம்? தமிழ் இன துரோகிகள் எல்லாம் இன்று எங்கு உள்ளார்கள் என்பதை அவரே தெள்ளத் தெளிவாக கூறிவிட்டார். தேன் பாட்டிலில் விஷத்தை ஊற்றி வைத்தால் அது தேன் ஆகிவிடுமா ?

திரு.வைகோ அவர்கள் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல் ஆளாக ஓடி வந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தவர். அதற்கு காரணம் கேட்டபோது அவர் “ திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது இலங்கை அரசு ராணுவத் தளவாடங்களை அவரிடம் கேட்ட போது எங்கள் உதவியை பெற்றுக் கொண்டு இலங்கையில் உள்ள எங்கள் தமிழின மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவா ? அது ஒருபோதும் நடக்ககூடாது என்று கூறியது மட்டுமல்லாமல் ஒரு தீபாவளி துப்பாக்கி கூட இலங்கை அரசிற்கு திரு. வாஜ்பாய் அவர்கள் கொடுக்கவில்லை“ என்று விளக்கம் அளித்தார் வைகோ. 2014 நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முதல் ஆளாக கூட்டணியில் இருந்து வெளியேறியவரும் வைகோ அவர்கள் தான். அதற்கு அவர் கூறிய காரணம் இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு திரு. நரேந்திர மோடி அவர்கள் அழைத்த காரணத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என்றார். ராஜபக்ஷேவை மட்டும் தனியாக பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைக்கவில்லையே , தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) தலைவர்கள் அனைவரையும் அழைத்த போது அதில் ராஜபக்ஷேவும் ஒருவர் என்ற காரணத்தால் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பிறகு 2015ல் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே தோல்வி அடைந்த பிறகு கூறியது என்னவென்றால் “ நான் தோல்வி அடைந்ததற்கு இந்திய உளவுத்துறை தான் காரணம் என்றார்”. அதுதான் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ராஜதந்திரம். இது கூட வைகோ அவர்களுக்கு புரியவில்லை.
2009ல் இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பு என்ற கடைசி கட்டப் போரின்போது , போர் நிறுத்தப் படவேண்டும் என்பதை வலியுறுத்தி திரு.திருமாவளவன் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அச்சமயம் அவர் பேசிய போது இலங்கையில் நடைபெறும் போரை உடனே நிறுத்த வேண்டும். அப்போருக்கு முழு உதவியை அளித்து வரும் காங்கிரசை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம், இத்தாலிக்கே துரத்தி விடுவோம் என்றெல்லாம் பேசியவர், பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் சேர்ந்தார். இக்கூட்டணியின் சார்பில் சென்னை தீவுத்திடலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திரு. கலைஞர் அவர்களின் தலைமையில் திருமதி.சோனியா காந்தி அவர்களும் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் திருமாவளவன் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் தான் திருமதி.சோனியா காந்தி அவர்கள் மேடைக்கு வந்தார் . உடனே தன் பேச்சை நிறுத்தி விட்டு சோனியா காந்தி வாழ்க என்று ஒரு காங்கிரஸ் தொண்டரைப் போல் கோஷம் எழுப்பியவர் தான் திருமாவளவன் அவர்கள். இதுதான் இவரது தமிழினப் பற்றோ ? ஒரு சில மாதங்களிலேயே தன் பேச்சில் தான் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார் திருமாவளவன் அவர்கள் . ஒரு M.P சீட்டிற்காகவா தமிழினப்பற்றில் இத்தகைய மாற்றம்? சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவும் செய்தார் .
இரு கம்யூனிஸ்ட்கள். ஒரு கொள்கையும் இல்லாதவர்கள். மகாத்மா காந்தி அவர்கள் கூறிய கொள்கையில்லா அரசியல் என்ற பாவத்தை தொடர்ந்து செய்து வருபவர்கள். காங்கிரசின் பொருளாதார கொள்கை நாட்டையே சீரழித்துவிட்டன என்று பேசுபவர்கள். அந்த காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டணி வைத்து இவர்களும் நாட்டை சீரழிப்பவர்கள். 2004 நாடாளுமன்ற தேர்தலில் 53 இடங்களை கைப்பற்றிய கம்யூனிஸ்ட்கள் , காங்கிரஸ் கட்சி கேட்காமலேயே , நாங்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று குடியரசுத் தலைவரை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்தவர்கள், அதற்கு காரணமாக அவர்கள் மதவாத பாரதிய ஜனதா ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்றார்கள். இவர்கள் ஆதரவு கொடுத்த காங்கிரஸ் தலைமையிலான அரசு அதன் பின் என்னென்ன செய்தது என்பதைப் பார்ப்போம். காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ரூபாய் 74,000கோடி , 2G அலைக்கற்றை ஊழல் ரூ.1,76,000 கோடி , நிலக்கரி சுரங்க ஊழல் ரூ.1,86,000கோடி , இலங்கை அப்பாவி தமிழ் மக்கள் ஒரு லட்சம் பேரை கொன்று குவிக்க மற்றும் ஒன்றரை லட்சம் பேரை காணாமல் போக இலங்கை சிங்கள அரசிற்கு உதவியது என்று பட்டியல் நீள்கிறது. குற்றம் செய்பவனைவிட செய்யத் தூண்டுபவனுக்கு இருமடங்கு தண்டனை வழங்க வேண்டும் என்கிறது சட்டம். இந்திய அரசு நடத்திய போரில் தளபதியாக இருந்து செயல்பட்டது ராஜபக்ஷே . இந்திய காங்கிரஸ் அரசிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது இரு கம்யூனிஸ்ட் கட்சிகள். அப்படியானால் யார் யாருக்கெல்லாம் தேர்தலின் மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே 1984ல் டில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான மதவாத தாக்குதல் நடத்தியது காங்கிரஸ் அதில் கொல்லப்பட்டது 3325 பேர் , பாதிக்கப்பட்டது 8000 பேர். எது மதவாத அரசு என்பதை மக்களே தீர்மானித்துக்கொள்ளட்டும். இந்தியாவில் எந்த அரசின் மூலம் மதவாத , இனவாத தாக்குதல்கள் நடைபெற்றன என்பதற்கான உண்மையான வரலாறு இப்படி இருக்க, அரசியல் செய்ய முடியவில்லை என்பதற்காக பொய்யாக பாஜக மதவாத கட்சி என்று பேசிவரும் போலி மதசார்பின்மை கட்சிகளுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். கம்யூனிஸ்ட்கள் ஓடியோடி காங்கிரசை அரியணையில் அமர்த்திய பின் அவர்களின் நிலை 2004ல் 53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் , அதன்பின் 2009 ல் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று குறைந்தார்கள், 2014ல் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேய்ந்தார்கள். அதுமட்டுமல்லாமல் 34 வருட மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு 2011ல் கவிழ்ந்தது. இதில் மார்க்சிஸ்ட் 136 இடங்களை இழந்து வெறும் 40 இடங்களை பெற்றது , இந்திய கம்யூனிஸ்ட் ஆறு இடங்களை இழந்து வெறும் இரண்டு இடங்களை பெற்றது. கொள்கையில் இருந்து மாறியதன் பாவப் பலன். தற்போது (2016) நடக்கும் சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரசை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் , மேற்கு வங்கத்தில் காங்கிரசோடு கூட்டணி வைத்துள்ளார்கள். மேற்கு வங்கத்தில் நண்பன் , கேரளாவில் பகையாளியா ? இரண்டும் தேசியக்கட்சிகள் . கொள்கைகளுக்கு கொள்ளிவைத்த கட்சிகள். இந்திய மக்களை பாவத்தில் தள்ளி விட்ட கட்சிகள். எதிர்காலத்தில் திரு.நரேந்திர மோடி அவர்களை எதிர்த்து கம்யூனிஸ்ட்களால் இந்தியாவில் அரசியல் செய்து வெற்றி பெற கடுகளவும் முடியாது , அந்நிலையில் மனம் வெதும்பி “ என்பிலதனை வெயில் போல காயுமே அன்பிலதனை அறம்” என்ற குரலுக்கு எடுத்துக்காட்டாகி , புழு போல் துடித்து ISIS பயங்கரவாத அமைப்போடு கூட கூட்டு சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! அதன் எடுத்துக்காட்டுதான் அண்மையில் டில்லி , ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் கண்ணையா குமார் தலைமயில் நடைபெற்ற சம்பவம்.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி ஏற்படுவதென்பது ஒரு குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையில் இருக்க வேண்டும். அப்படி ஏற்பட்டது தான் 1998ல் திரு. வாஜ்பாய் அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. துரோகத்தை சந்தித்தாலும் ஐந்து வருடத்திற்கு பதில் ஆறு வருடம் ஆட்சி செய்தவர். ஆனால், தமிழகத்தில் தற்போது ஒரு விசித்திரமான கூட்டணி உருவாகி இருக்கிறது. அது தேமுதிக –மக்கள் நல கூட்டணி-தமாகா சேர்ந்த ஒரு அணி. இலங்கையில் 2009ல் தமிழின அழிப்பை நடத்திக்கொண்டிருந்த போது , ஒரு முக்கிய அமைச்சராக இருந்த வாசன் அவருக்கு தேனாம்பேட்டை முதல் கோயம்பேடு வரை சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து அவரோடு கூட்டணி . அதுமட்டுமல்லாமல் தேமுதிக –மக்கள் நல கூட்டணி-தமாகா என்ற ஒரு அணி அமையவே அதன் ஒருங்கிணைப்பாளர் 1,500 கோடி ரூபாய் பெற்றாராம். பலர் கேட்டும் இன்று வரை இல்லை என்று மறுக்கவில்லை. மார்ச் 27 அன்று பாலிமர் தொலைக்காட்சியில் அவருடனான நேர்காணலின் போது கூட இக்கேள்வி எழுப்ப்பட்டபோது பத்து நிமிடத்தில் அமைதியாகவே எழுந்து சென்றுவிட்டாரே தவிர இக்குற்றச்சாட்டை இல்லை என்று மறுக்கவில்லை. 500 கோடி ரூபாய் பேரத்திற்கு திரு.விஜயகாந்த் அவர்கள் படியவில்லை என்று அவ்வப்போது பேசி வருகிறார் மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர். அப்படியானால், 700 அல்லது 800 கோடி ருபாய் பேரத்திற்கு படிந்திருப்பாரோ? ஆக, தேமுதிக –மக்கள் நல கூட்டணி-தமாகா என்ற அணியின் குறைந்த பட்ச செயல் திட்டமே பெரும் பணப்பரிமாற்றமா ? ஒருவேளை இவர்களின் ஆட்சி அமைந்தால் அது 2G, நிலக்கரி சுரங்க ஊழலையும் மிஞ்சுமே ! அடிக்கடி ரோமாபுரியின் வீரத்தை தமிழகத்தில் பேசும் ஒருங்கிணைப்பாளர் , புறமுதுகிட்டு ஓடிவிட்டார் தேர்தல் போட்டியில் இருந்து.
எங்கு பார்த்தாலும் தமிழினத்தை அழித்தவர்கள் , அதற்கு துணை போனவர்கள் , அதை நியாயப்படுத்தும் வகையில் பேசியவர்கள் தான் உள்ளார்கள். “ ஈன்றாள் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை “ என்றார் வள்ளுவர் . பாவம் தமிழ்நாட்டு மக்கள். தமிழக வாக்காளர்களே, சிந்தித்து வாக்களிப்பீர், பாரதிய ஜனதாவிற்கு வாய்ப்பளிப்பீர்.
தமிழ் இனம் மீது போர் நடத்திய காங்கிரஸ் அரசும் படுதோல்வி, அதன் தளபதி ராஜபக்ஷேவும் படுதோல்வி அடைந்தனர் தேர்தலில். எந்த இனத்தை அழித்தாலும், அதற்கு அனைத்து தரப்பு மக்களும் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்பதற்கு இதுவே நற்சான்றாகும் ................

No comments:

Post a Comment